உயிரிழந்த தந்தந்தந்தம் கொண்ட யானையான கவன்திஸ்ஸவை முத்தமிடுவது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவரை முத்தமிடுவதை விட மிகவும் அர்த்தமுள்ள செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடனான அரசாங்கத்தின் உறவுகள் குறித்து கேள்வி எழுப்பினார். இந்த நிறுவனங்களையே அரசாங்கம் முத்தமிட்டு, அணைத்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் விமர்சித்தார்.
2025ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை நிலை தொடர்பாக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். உலக வங்கியின் 2025ஆம் ஆண்டு அறிக்கையை மேற்கோள்காட்டிய அவர், அன்றாடம் 8.30 அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழும் மக்களின் விகிதம் 61.1 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய சர்வதேச நாணய நிதியத் தலைவரை அரவணைத்து வரவேற்கும் புகைப்படம் அடங்கிய ஆவணம் ஒன்றையும் சஜித் பிரேமதாச சபையில் காண்பித்தார்.
“பிரதமருக்கு எதிராக இதனைக் காட்டக்கூடாது. ஆனால், நீங்கள் முத்தமிடுவது போன்ற இந்தப் படம் இங்கே உள்ளது. அதில் தவறில்லை, ஒருவரை வரவேற்கும் வழக்கமான முறையே அது” என அவர் தெரிவித்தார்.
கவன்திஸ்ஸ யானைக்கு அவர் பகிரங்கமாக முத்தமிட்ட சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கருத்துக்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச, அந்தச் செயலில் உள்ள முக்கியத்துவத்தை அரசாங்கத் தரப்பினர் புரிந்துகொள்ளவில்லை எனக் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத் தலைவரை முத்தமிடுவதை விட, உயிரிழந்த யானையை முத்தமிடுவதே மேலானது என்றும் அவர் வலியுறுத்தினார்.










