சாதாரண மக்களுக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும்

-யாழ் நிருபர்-

சட்டத்தரணிகள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சாதாரண மக்களுக்கு மனித உரிமை என்றால் என்ன? மனித உரிமை மீறப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி திருமதி.ரொபின்ஷா நக்கீரன் தெரிவித்தார்.

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி’ என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினமானது இன்று சனிக்கிழமை யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்ற போது  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மனித உரிமைகள் கொண்டாடப்படுவதன் அவசியம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அதாவது இலங்கையில் ஏற்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பில் நாம் அனைவரும் அறிந்த போதிலும் அது தொடர்பில் எந்தவித காத்திரமான, எதிர்க்க முடியாத நிலையில் நாம் அனைவரும் காணப்படுகின்றோம்.

எனவே, இந்த மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது இனியாவது மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மனித உரிமை என்றால் என்ன? மனித உரிமை மீறப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும். சாதாரணமாக கற்ற தரப்பினர் மத்தியில் மட்டும் இந்த மனித உரிமைகள் விழிப்புணர்வு காணப்படாமல், சாதாரண மக்களிடத்திலும் இந்த விழிப்புணர்வு காணப்பட வேண்டும்.

எனவே, சட்டத்தரணிகள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் சாதாரண மக்களுக்கும் இந்த மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு, எமது சகோதரர்களுக்கு, எமது தமிழ் பேசும் மக்களுக்கு, மனித உரிமைகள் மீறப்படாமல் நிறுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என என்றார்.