வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

திக்வெல்ல, கொடஉட பிரதேசத்தில் கிளை வீதியில் மிகவும் செங்குத்தான இடத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 10 வயது சிறுவன் ஒருவன் துவிச்சக்கரவண்டியின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளான்.

அதேபோல், அம்பலாங்கொட ரிதியகம வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்துள்ளதுடன், அம்பலாங்கொடை ருஹுனு ரிதியகம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயது மற்றும் 25 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஹிக்கடுவ கருவாத்தோட்டம் புகையிரத கடவையின் ஊடாக பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்கள் புகையிரதத்துடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கமவில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானதில் ஹிக்கடுவ நலாகஸ்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்