கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக, காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நேற்று திங்கட்கிழமை இந்நியமனத்தை வழங்கி வைத்தார்.
நியமனத்தைத் தொடர்ந்து, திருகோணமலை நகரில் அமைந்துள்ள வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த புதிய தவிசாளர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது அதிகார சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததுடன், மாகாணத்தின் போக்குவரத்து நிலவரங்கள் குறித்த முதற்கட்ட கலந்துரையாடலும் இடம்பெற்றது.
பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த புதிய தவிசாளர் எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி, கிழக்கு மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவைகளை மேலும் வினைத்திறனானதாகவும், மக்களுக்கு அசௌகரியங்களற்ற பாதுகாப்புமிக்க சேவையாகவும் மேம்படுத்துவதற்குத் தேவையான புதிய திட்டங்களை அர்ப்பணிப்புடன் நடைமுறைப்படுத்துவேன், என்றார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளராகவும், சுற்றாடல் அமைச்சின் மாவட்ட இணைப்பாளராகவும் பணியாற்றி வரும் பிர்தௌஸ் நளீமி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதன்மைப் பங்காற்றி வந்த நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.