கிழக்கிலிருந்து வெளிவரும் ‘தென்றல்’ சஞ்சிகைக்கு உயர் விருது

கிழக்கிலிருந்து கடந்த பதினைந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ‘தென்றல்’ சஞ்சிகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை  திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாண இலக்கிய விழாவின் போது விருது வழங்கிக் கௌரமளிக்கப்பட்டது.

இதன்போது, விருது மற்றும் சான்றிதழினை சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் பெற்றுக் கொண்டார். சஞ்சிகைக்கு விருது வழங்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முதல் ஆண்டிலேயே ‘தென்றல்’ சஞ்சிகை தனதாக்கிக் கொண்டது.

திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியரும், ஊடகவியலாளருமான கதிரேசபிள்ளை கிருபாகரன் என்ற தனி மனிதன் ‘தென்றல்’ சஞ்சிகையை ஆரம்பித்தார்.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் பணிப்பாளராக இருந்த மறைந்த மறைந்த அருட்தந்தை த.சிறிதரன் சில்வெஸ்டரின் திருக்கரங்களால் 2008 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 6 ஆம் திகதி காலாண்டுச் சஞ்சிகையான ‘தென்றலின்’ கன்னி இதழ் விரிக்கப்பட்டது.

இச்சஞ்சிகை அரங்கேற சிரேஷ்ட ஊடகவியலாளரும், மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த பல்வேறு பத்திரிகைகளின் ஸ்தாபக ஆசியராகவும் பணிபுரிந்த மறைந்த வீ.சு.கதிர்காமத்தம்பியின் வழிகாட்டலும், ஊக்கமும் இவருக்குப் பக்க பலமாக அமைந்தன.

வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தல், மூத்த எழுத்தாளர்களை இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்தல், மாணவர்களின் அறிவுப் பசிக்கு விருந்தூட்டல், மட்டக்களப்பின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிக் கொணர்தல் ஆகிய இலக்கினை நோக்காகக் கொண்டு, ‘தென்றல்’ சஞ்சிகை உலகில் காலடி பதித்தது.