மாநகரசபை பட்ஜெட் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை

 

யாழ். மாநகரசபை பட்ஜெட் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இல்லை எனவும்,  ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆட விடமுடியாது, என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட  கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அபிவிருத்தி, அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பயணித்துவரும் கட்சி.

அந்த வகையில் யாழ். மாநகரசபையின் பட்ஜெட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் என்னிடமில்லை ஆனால் எமது கட்சியின் ஆதரவில்லாமல் பட்ஜட்டை நிறைவேற்ற முடியாது.

கடந்த வாரம் யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது நாம் அதில் பங்கு கொள்ளவில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு.

மாநகர முதல்வர் தெரிவில் எமது கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி விடயங்களில் எமது கட்சி புறக்கணிக்கப்படுகிறது.

மாநகர சபையில் ஆதிக்கமுள்ள எமது கட்சி மீது தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் தொடர்ந்தும் ஈபிடிபி யின் தோளில் ஏறி ஆட விடமுடியாது.

ஆகவே, யாழ். மாநகர சபையின் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பில் என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை பேசவில்லை கட்சி அங்கத்தவர்களுடன் பேசினார்களோ தெரியவில்லை, என அவர் மேலும் தெரிவித்தார்.