ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபக பொதுச்செயலாளர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை ஜெ.வினோகாந்தன் தலைமையில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
பத்மநாபா அறிவியல் கழகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு மிக விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கி. திரேஸ்குமார் மற்றும் க.மாதவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில், தியாகிகளின் நினைவாக சுடரேற்றி, மலர் தூவி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, வெருகல் படுகொலை, காத்தான்குடி படுகொலை மற்றும் அருந்தலாவ படுகொலை உள்ளிட்ட பல்வேறு கொடூரமான படுகொலைகளில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கும், தியாகிகளுக்கும் மதிப்பளிக்கும் முகமாக சுடரேற்றி, விளக்கேற்றி கூட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் பாரிய அளவிலான நிதியுதவிகளும் நலத்திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன:
120 பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளை ஊக்குவிப்பதற்காக, தலா 5,000 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர் ஒருவரின் உயர்கல்வித் தேவைக்காக ஒரு மடிக்கணினி (Laptop) வழங்கி வைக்கப்பட்டது.
இந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நான்கு மாணவர்களுக்கு, அவர்களின் பல்கலைக்கழக படிப்பு நிறைவடையும் வரை மாதாந்த ஊக்குவிப்புத் தொகையாக தலா 15,000 ரூபாய் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்ட நிதியும் இதன்போது கையளிக்கப்பட்டது.
இளையோரின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் முகமாக நான்கு விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டுப் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.