தேங்காயின் விலை அதிகரிப்பு

நாட்டில் சந்தைகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கின்றது.

தற்போது பெரிய தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்தும் குறைந்து வருவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் சில்லறை சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 150 முதல் 160 ரூபா வரையான விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று, உள்ளூர் பெரிய வெங்காயம் 240 ரூபாவிற்கும் குறைவான பெறுமதியில் விற்பனை செய்யப்பட்ட அதேவேளை,  இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 170 ரூபாவிற்கும் குறைவான பெறுமதியில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த வாரம் ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 440 ரூபாவாக இருந்தது, இந்த வாரத்தில் அதன் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பல மலையக மரக்கறிகளின் விலைகள் இன்னும் உயர்வாகவே உள்ள,  அதேவேளை போஞ்சி 400 முதல் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று பல பொருளாதார நிலையங்களில் ஒரு கிலோகிராம் கறி மிளகாயின் விலை 600 ரூபாவாக இருந்தது.

கரட் 250 முதல் 300 ரூபாய் வரையிலும்,  வெண்டைக்காய் 300 முதல் 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக தென்னிலங்கையில் இருந்து வருவிக்கப்படும் மரக்கறிகளின் விலைகள் சற்று குறைந்துள்ளதுடன், பூசணிக்காய் 80 முதல் 100 ரூபா வரையிலும், கத்தரிக்காயின் விலை 250 ரூபாவிற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.