சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்

 

-மன்னார் நிருபர்-

நாத்தார், புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பண்டிகை கால வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.

மன்னார் நகர சபையினால் கேள்வி கோரல் அடிப்படையில் 284 மேற்பட்ட வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் தென் பகுதி வியாபாரிகள் இடத்தை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் இடம்பெறும்.

தற்போது மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் மன்னார் நகர் பகுதிக்கு வருகை தந்து பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மழைக்கு மத்தியில் மக்கள் பண்டிகைக்கால பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர் .

பொதுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மன்னார் நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களை விட இம்முறை அதிகமான, விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதேவேளை இம்முறை மன்னார் நகரசபைக்கு பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால் ஒரு கோடியே 42 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

குறித்த நிதியானது 2023 ஆம் ஆண்டிற்கான மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு செலவிடப்படவுள்ளது.

மேலும், குறித்த பண்டிகை கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளமையினால் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் தமது பொருளாதாரத்திற்கு அமைய பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.