இலஞ்சம் அல்லது ஊழல் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு புதிய ஊழல் தடுப்பு சட்டத்தின் மூலமாக அதற்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி தனியார்துறையில் இலஞ்சத்துக்கு எதிராக முதல் நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
முன்னர் அரசாங்கத்துறையில் இலஞ்சம் அல்லது ஊழலுக்கு எதிராகவே ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்கமுடியும். 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தனியார்துறை ஊழலுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை( 26/1) ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் அதிகாரிகள் தனியார்துறையில் இலஞ்ச குற்றக் குற்றம் தொடர்பில் முதற்சோதனையை நடத்தினார்கள்.
தனியார் ஹோட்டல் ஒன்றின் கணக்காளராகவும் மனிதவள முகாமையாளராகவும் பணியாற்றும் அதிகாரியொருவர் பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கேட்டதாக செய்யப்பட்ட முறை்பாட்டை அடுத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மகாவிலாச்சிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே அந்த முறைப்பாட்டைச் செய்தார்.
தனியார் ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு தற்போதைய சேவைக்கட்டணத்திர் 75 சதவீதம் முழுமையாக தயப்படும் என்றும் எதிர்காலத்தில் அவரின் சேவை நிரந்தரமாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி அவர் பணியாற்றுவதற்குரிய சூழல் உறுதிசெய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
அவ்வாறு செய்வதற்கு பதிலாக பாலியல் உறவுகொள்வதற்கு சம்மதிக்கவேண்டும் என்று கூறி அந்த ஊழியரை ஹபரணையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு கணக்காளர் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சந்தேகநபரை கைதுசெய்த இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் கெக்கிராவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.