வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, இது தொடர்பில் பதற்றமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
சாரதி அனுமதிப்பத்திரம், வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வது அல்லது வங்கிக் கணக்குகளைத் திறப்பது போன்ற தேவைகளுக்காக TIN சான்றிதழைப் பெறுவதற்கு இனிமேல் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லாத புதிய நடைமுறையொன்று விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, இதுவரை TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தாங்கள் சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனத்திடம் தமது தேசிய அடையாள அட்டையின் பிரதி, செயற்பாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைச் சமர்ப்பித்தால் போதுமானது.
அதன்பின்னர், குறித்த நிறுவனம் விண்ணப்பதாரரின் விபரங்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு அனுப்பி, தேவையான TIN நடைமுறைகளை நேரடியாகப் பூர்த்தி செய்யும். இதன்போது, விண்ணப்பதாரர் கோரும் சேவையையும் அந்த நிறுவனம் வழங்கும்.
இதற்கமைய, விண்ணப்பதாரருக்கான TIN அல்லது வருமான வரி இலக்கம் அவரால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழி முறைமை ஊடாகவும் TIN மற்றும் வருமான வரிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளவர்கள் மற்றும் இதுவரை அதனைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.










