மட்டக்களப்பு சிவானந்தாவில் இடம்பெற்ற மருத்துவ முகாம்

 

மட்டக்களப்பு சிவானந்த தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் தேவை உடைய மாணவர்களுக்குமான மருத்துவ முகாம் நேற்று வியாழக்கிழமை சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான வாசுதேவன் தலைமையில் குறித்த மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது.

சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி கற்று சமூகத்தில் வைத்தியராக உள்ள பழைய மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்ற வைத்திய முகாமில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி உதயகுமார் உள்ளிட்ட மேலும் பல வைத்தியர்கள் கலந்துகொண்டு பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் மற்றும் வைத்திய தேவையுடைய மாணவர்களுக்குமாக மிகச் சிறப்பான முறையில் இவ் வைத்திய முகாமினை முன்னெடுத்துள்ளனர்

குறித்த வைத்திய முகாமில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி அவர்கள் கலந்து கொண்டு ஆசையுரை வழங்கியிருந்ததுடன், பழைய மாணவர்கள், வைத்தியத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார், சாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட மேலும் பல கலந்து கொண்டு குறித்த வைத்திய முகாமினை சிறப்பித்துள்ளனர்.

இதன் போது அதிகளவிலான ஆசிரியர்களும், வைத்திய தேவையுடைய மாணவர்களும் பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவ்வாறான மருத்துவ முகாம் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை இடம்பெற உள்ளதாகவும் பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.