வீடொன்றின் குளியலறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள வீடொன்றின் குளியலறையில், சட்டவிரோத மதுபான உற்பத்தி நடைபெறுவதாக, அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவுக்குக் ரகசியத் தகவல் கிடைத்தது.
குறித்த தகவலின் அடிப்படையில், இன்று சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது
இதன்போது, கோடா, சட்டவிரோத மதுபானம் மற்றும் இவற்றிற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், இவ்வாறு சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்து, அருகில் உள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்று பொருட்களுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் அறிவுறுத்தல்களின் பேரிலும், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் உத்தரவுகளின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் நேரடி மேற்பார்வையின் கீழும், அம்பாறை மாவட்டம் 1 உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன தலைமையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.