மட்டக்களப்பில் காணாமல் போயுள்ள இரண்டு மீனவர்கள்

-வாழைச்சேனை நிருபர்-

வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடித் தொழிலுக்காகச் சென்ற மீன்பிடி இயந்திரப் படகொன்று விபத்துக்குள்ளானதாக வாழைச்சேனை மீன்மிடி துறைமுக முகாமையாளர் ஜோர்ஜ் விஜிதரன் தெரிவித்தார்.

கடந்த 3 ஆம் திகதி மூன்று மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர் குறித்த படகானது ஹம்பாந்தோட்டை கடலில் இருந்து சுமார் 190 கிலோ மீற்றர் தூரத்தில் 8 ஆம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை 11 ஆம் திகதியன்று அப்பகுதியால் மீன் பிடிக்கு சென்ற ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த வர்சனபுத்தா என்ற பெயருடைய ஆழ்கடல் மீன் பிடி படகைச் சேர்ந்த மீனவர்கள் குறித்த படகு விபத்திற்குள்ளான நிலமை கண்டு படகில் பயணித்த வாழைச்சேனை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆர்.பௌசர் வயது (36) என்ற மீனவரை காப்பாற்றி தமது பாதுகாப்பில் வைத்துள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்தார்.

காணாமல் போயுள்ள பிறந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த என்.எம்.றியாஸ் வயது (42) எம்.எஸ்.எம்.றியாஸ் வயது (30) ஆகிய இரு மீனவர்களை தேடும் பணியில் கடல் படையினர் ஈடுபட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

காற்றின் வேகம் கடல் கொந்தழிப்பு காரணமாக தாம் பயணித்த படகு கவிழ்ந்துள்ளதாகவும், தன்னுடன் பயணித்த இருவரது நிலமை தொடர்பாக எவ்வித தகவலும் தெரியவில்லையென ஹம்பாந்தோட்டை மீனவர்கள் காப்பாற்றி அவர்களது படகில் பாதுகாப்பாக வைத்துள்ளதாக காப்பாற்றப்பட்ட ஆர்.பௌசர் என்ற மீனவர் தொலைத் தொடர்பு கருவி மூலம் வாழைச்சேனை துறைமுகத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதேவேளை, மாண்டஸ் சுறாவளியின் தாக்கத்தின் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆழ் கடலுக்கு மீன் பிடி தொழிலுக்கு செல்லவேண்டாம் என கடந் 6 ஆம் அரசினால் தகவல் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் காணாமல் போயுள்ள இரண்டு மீனவர்கள்