மட்டக்களப்பில் அதிரடி சுற்றி வளைப்பு : பெருமளவான கசிப்பு மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பெருமளவான கசிப்புகள் மீட்கப்பட்டு, இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர் மற்றும் அதன் அண்டிய பகுதிகளில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைகளை தடுப்பதற்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறை இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், புதூர்ப்பகுதியில் இரண்டு இடங்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவினால் இன்று வியாழக்கிழமை சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க, பொலிஸ் சாஜன் ரி.கிருபாகரன்ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

இதன்போது, ஒரு வீட்டிலிருந்து 40,000 மில்லி லீற்றர் கசிப்பும், இன்னுமொரு வீட்டிலிருந்து 10,000 மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டதுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட கசிப்பையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.