பிரித்தானியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நச்சுத்தன்மை வாய்ந்த அஸ்பெஸ்டஸ் துகள்கள் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்ட 30-க்கும் மேற்பட்ட சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் விற்பனையிலிருந்து மீளப் பெறப்பட்டுள்ளன.
Tesco, Argos மற்றும் M&S போன்ற முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்கள், தமது கடைகளிலிருந்த குறிப்பிட்ட விளையாட்டுப் பொருட்களை அகற்றியுள்ளன.
தயாரிப்பு பாதுகாப்பு மற்றும் தரநிலை அலுவலகத்தின் இணையதளத்தில் இது தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அஸ்பெஸ்டஸ் துகள்கள் ‘மெசோதெலியோமா’ எனும் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. இது நுரையீரலின் உட்புறப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், மிகக் குறைந்த அளவில் அஸ்பெஸ்டஸ் கலந்திருந்தாலும் அத்தகைய பொருட்களை விற்பனை செய்ய பிரித்தானியா தடை விதித்துள்ளது.
சீனாவில் உள்ள சுரங்கங்களிலிருந்து பெறப்படும் மணல் இந்த விளையாட்டுப் பொருட்களில் பயன்படுத்தப்படுவதே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
சீனாவில் அஸ்பெஸ்டஸ் நார்கள் இயற்கையாகவே மண்ணில் காணப்படுவதோடு, அங்கு லேபிளிங் தொடர்பான விதிகள் கடுமையானதாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் உங்கள் வசம் இத்தகைய விளையாட்டுப் பொருட்கள் உள்ளனவா என்பதை OPSS இணையதளத்தில் சரிபார்க்கவும்.
ஒருவேளை அத்தகைய தயாரிப்புகள் இருந்தால், அவற்றை உடனடியாகக் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு அப்புறப்படுத்தவும் என நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் Hobbycraft நிறுவனம் தனது கைவினைப் பொருட்கள் தொகுப்பில் அஸ்பெஸ்டஸ் துகள்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அவற்றை மீளப் பெற்றிருந்தது.
விளையாட்டுப் பொருட்களில் அஸ்பெஸ்டஸ் கலந்திருப்பது ‘மிகவும் அதிர்ச்சியளிப்பதாக’ நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் கேட் டியர்டன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பற்ற முறையில் இத்தகைய பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, முறையான ஒழுங்குவிதிகள் இல்லாத ஒன்லைன் சந்தைகளில் இத்தகைய ஆபத்தான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை OPSS தீவிரமாக ஆராய வேண்டும் என ‘Which?’ நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.