7 நா.ம.உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது

கடந்த திங்கட்கிழமை 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை காலை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, அலரிமாளிகைக்கு அருகிலுள்ள மைனகோகாமா போராட்டத் தளத்தை அரசாங்க சார்பு ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து வன்முறைகள் வெடித்தன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மன்றத்தினால் அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அரச சார்பு ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்கு அருகில் உள்ள மைனாகோகாமா போராட்டத் தளத்தைத் தாக்கி இங்குள்ளவர்களை கலைத்தனர்.

இதையடுத்து கோட்டகோகாம எனப்படும் காலி முகத்திடலில் உள்ள பிரதான போராட்டத் தளத்திற்குச் சென்று பல கூடாரங்களை அழித்ததுடன், அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களைத் தாக்கியதையடுத்து வன்முறைகள் வெடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.