-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பெண்களே இந்த நாட்டின் கண்கள் என்று கருதி நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் கௌரவமான முறையில் நன்மை செய்பவர் ரணில் விக்கிரமசிங்ஹ என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானா பெருமிதமாகக் கூறினார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவித்தார்.
அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்யக் கூடிய பல திட்டங்களைத் தீட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ, பெண்களைத் தலைமையாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு பல நன்மை தரும் திட்டங்களை ஏற்கெனவே அமுலாக்கியுள்ளார். இந்த நாட்டில் பெண்களுக்கு பெருமை சேர்த்த பெருமை ரணில் விக்கிரமசிங்ஹவையே சாரும்.
அவரது தொலைநோக்கு சார்ந்த திட்டங்கள் மீண்டும் இந்த நாட்டை கியூ யுகத்திற்கும் அதல பாதாளத்திற்கும் இட்டுச் செல்ல முடியாது என்பதில் அவர் கவனமாக இருக்கின்றார். அதற்காகத்தான் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் நூறிற்கும் மேற்பட்ட நாங்கள் ஆதரவளித்து நாடெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றோம்.
ஒவ்வொரு தமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கிய மலாய் மகனும் மகளும் இலங்கையர் என்ற அடிப்படையிலே ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய ஒரு சிறந்த தலைவராக ஏற்கெனவே செய்து காட்டிய ரணில் விக்கிரமசிங்கஹவைத் தெரிவு செய்ய வேண்டிய கடைமைப்பாடு உள்ளது.
தேர்தல் அதிகாரிகளையும் படித்தவர்களையும் பாமரர்களையும் மின்கம்பத்திலே தொங்கவிட்டு படுகொலையைப் புரிந்தவர்களின் பாசறையிலே வந்தவர்தான் இந்த அனுரகுமார திஸாநாயக்க. அப்படிப்பட்ட கொடுஞ் செயல்கள் பலவற்றை நேரிலே பார்த்தவன் நான். இவ்வாறு சுமார் 60 ஆயிரம் பேர் அவர்களில் அநேகமானோர் இளைஞர் யுவதிகள் அனுரகுமாரவின் ஜேவிபியால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற சரித்திரத்தை இப்போது அனுரவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் ஏன் மறந்தது என்றும் அவர் அலி ஸாஹிர் மௌலானா கேள்வி எழுப்பினார்.
அப்படிப்பட்டவர்கள் இப்பொழுது எழுச்சி என்று சொல்வதன் உண்மை அர்த்தம் அது எழுச்சியல்ல . அது ஒரு கிளர்ச்சி . ஏனென்றால் அவர்கள் அராஜகத்தைக் கையிலெடுத்து கிளர்ச்சி செய்துதான் பழக்கப்டபட்டவர்கள். இந்த நாடு மீண்டும் எழுச்சி என்ற பெயரில் பங்களாதேசத்தில் சமீப சில நாட்களில் நடந்ததைப் போன்று மீண்டும் ஒரு கிளர்ச்சிக்குச் சென்று சீர் குலைய வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் சிந்தித்துணர வேண்டும் என்றார். அதேவேளை இனவாதத சிந்தனையுடன் இனவாதிகளை இணைத்துக் கொண்டு களமிறங்கியுள்ள சஜித் போன்றவர்களை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.