மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் ஒழிப்பு புனர்வாழ்வு இடைத்தங்கல் நிலையத்தில், 14 நாட்கள் வெற்றிகரமாக சிகிச்சையினை நிறைவு செய்துகொண்ட 30 பேர், நேற்று செவ்வாய்க்கிழமை நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களது உறவினர்களிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் கீழ், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் இந்த புனர்வாழ்வு இடைத்தங்கல் நிலையம் கடந்த மே மாதம் 20ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்ட 30 பேரே, தங்களது மருத்துவ மற்றும் உளவள புனர்வாழ்வு சிகிச்சைகளை நிறைவு செய்து சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியும், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மாவட்ட இணைப்பாளருமான ப. டினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரசாக், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜூஸ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் கே. மோகனகுமார் மற்றும் உளநல வைத்தியர் டான் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிகிச்சையை முடித்தவர்களுக்கான நற்சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்கள் தங்களது உறவினர்களிடம் பாதுகாப்பாகக் கையளிக்கப்பட்டதோடு, சிகிச்சை பெற்றவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் அங்கு தங்களுக்குக் கிடைத்த நேர்மறையான அனுபவங்கள் மற்றும் மறுவாழ்வுப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
“சமூகத்தில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை குற்றவாளிகளாகப் பார்க்காமல், அவர்களை ஒரு நோயாளியாகக் கருதி அவர்களுக்கான சிகிச்சைகளை முற்றிலும் இலவசமாக வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. எனவே, போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் விடுபட்டு நல்வாழ்வு வாழ விரும்புவோர் அல்லது அவர்களது குடும்பத்தினர், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் 1927 என்ற அவசர உதவி இலக்கத்திற்கு அழைத்து ஆலோசனைகளையும் இலவச சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்தனர்.