-அம்பாறை நிருபர்-
காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டும் நிகழ்வு அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட புற நகர் பகுதிகளில் தற்போது வழமையாகி விட்டது.
இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த கல்முனை சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை பிரதேச கரைவாகு வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடாமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் வேடிக்கை பார்க்கும் நிலையில் யானைகளை சிறுவர்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குறித்த பிரதேச வயல் வெளி பகுதியில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் 08 முதல் 10 வரை வருகை தந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகள் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்நுழைவதுடன் அவ் யானைகளை சிறுவர்கள் விரட்டும் நடவடிக்கையில் கடந்த சில தினங்களில் ஈடுபட்டதை காண முடிந்தது.
இது தொடர்பில் பொறுப்புவாய்ந்தவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.மேலும் வயல் வெளிகளில் சஞ்சரித்து காணப்படும் குறித்த காட்டு யானை கூட்டத்தினை காண்பதற்காய் பிற்பகல் வேளையில் பொது மக்கள் வருகை தந்து பார்வையிட்டு செல்வத்தினை காணக்கூடியதாய் உள்ளது.
