புதிய கூரைச் சூரிய மின்சக்தி கட்டமைப்புகளுடன் மின்கல சேமிப்பு (Battery Storage) கட்டமைப்புகளையும் நிறுவும் வீடுகளுக்கு, ஒரு கிலோவாட் மணித்தியாலத்திற்கு (kWh) 25,000 ரூபாய் மானியம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த முன்மொழிவை வெளியிட்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஊக்குவித்தல், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்படும் சமநிலையின்மையைக் குறைத்து தேசிய மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நெட் பிளஸ் (Net Plus) திட்டத்தின் கீழ் புதிய கூரைச் சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை நிறுவும் வீடுகளுக்கு, மின்கல சேமிப்புத் திறனின் ஒவ்வொரு கிலோவாட் மணித்தியாலத்திற்கும் 25,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். அதிகபட்சமாக 10 கிலோவாட் மணித்தியால சேமிப்புத் திறனுக்கு இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.
இந்த மானியத் திட்டத்திற்காக 3,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், சூரிய மின்சக்தி சேமிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் மின்கலங்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டை (PAL) நீக்கவும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
இதன் மூலம் நேரடி மானியத்திற்கு மேலதிகமாக, ஒவ்வொரு கிலோவாட் மணித்தியாலத்திற்கும் சுமார் 4,000 முதல் 5,000 ரூபாய் வரையான மேலதிக வரிச் சலுகை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவும் வீடுகளுக்கு அரசாங்கத்தின் நேரடி மானியத்துடன், வரி குறைப்பின் மூலமான நன்மையும் கிடைக்கும் என ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில், வீடுகளில் மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.










