மொனராகலை தொம்பஹாவெல பிரதேசத்தில் பேருந்தில் அனுப்பப்பட்ட பொதியை பெறுவதற்காக காத்திருந்த பெண் கெப்ரக வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் சந்தேகநபர் அபகரித்துச் சென்றுள்ளனர்.
மொனராகலை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே இதன் போது பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
கொழும்பில் இருந்து பேருந்தில் அனுப்பப்பட்ட பொதியை பெற்றுக்கொள்வதற்காக இரவு 9 மணியளவில் வீதியில் குறித்த பெண் சென்றுள்ளார்.
இதன் போது குறித்த பெண்ணுக்கு அருகில் கெப்ரக வாகனமொன்று வந்து நின்று வாகனத்தின் சாரதி, எங்கே செல்கிறீர்கள் என அப்பெண்ணிடம் வினவியுள்ளார்.
தொம்பஹாவெல நகருக்குச் செல்வதாக அப்பெண் பதிலளிக்கவே, தானும் நகருக்குத்தான் செல்கின்றேன் எனக்கூறி, சந்தேக நபர் அப்பெண்ணை வாகனத்தின் முன்பக்க இருக்கையில் ஏற்றிக்கொண்டுள்ளார்.
வாகனத்தை நகரத்தில் நிறுத்தாமல், கொஞ்சம் முன்சென்று, பாழடைந்த குறுக்கு வீதியில் நிறுத்தி, அப்பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
அதன்பின்னர், அதே கெப்ரக வாகனத்தில் அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு நகருக்குள் இறக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் அபகரித்துச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, கெப்ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.