மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காட்டு பகுதியில், புதைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்று மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு கொண்ட ரிவோல்வர் ஒன்று உட்பட இரு கை துப்பாக்கிகளை, கொழும்பு மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவு, இன்று திங்கட்கிழமை மீட்டு, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ், மத்திய ஊழல் தடுப்பு விசேட பிரிவு பணிப்பாளர் கே.ஏ. உதயகுமார வழிகாட்டலில், பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.கே. பெரேரா, ஜெயலால், சுரங்க, ஜெயசுந்தர, கே.சுமாறன், திசரா ஆகியோர் கொண்ட குழுவினர், சம்பவ தினமான இன்று மட்டக்களப்பு பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இதன் போது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மைக்கிரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று, அதன் ரவை 4, இத்தாலி தயாரிப்பான ரிவோல்வர் கைத்துப்பாக்கி ஒன்றையும் மீட்டு, தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இதனை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும், பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள் செயற்பாட்டு நிலையில் இருந்ததுடன், இந்த ஆயுதங்கள் குற்றம் செய்யும் நோக்கத்துடன் இந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்