வவுனியா மாநகர மேயர் சு.காண்டீபனை பதவியில் இருந்து நீக்கி வடமாகாண ஆளுனரால் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆளுனரின் முடிவினை சவாலுக்கு உட்படுத்தி மனுதாரரான வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று (03) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனுதாரர் சார்பில் ஆயஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,
வட மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வவுனியா மாநகர மேயர் காண்டீபனின் பதவியை நீக்கி அறிவித்தார்.
அதற்கு எதிராக எழுத்தாணை மனு ஒன்று வவுனியா மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, இன்று (03) அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதற்கான அறிவித்தல் பிரதிவாதிகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பிரதிவாதிகள் இன்று சமூகமளித்திருக்கவில்லை. இந்த மனுவிலே காணப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகவும், மனுதாரர் சார்பில் வெளியிடப்பட்ட சமர்ப்பணங்கள் தொடர்பாகவும் மன்று திருப்தியடைந்து எதிர் மனுதாரருக்கு அறிவித்தல் சேர்க்கும் படியான ஒரு கட்டளையை நியமித்திருக்கிறது.
அத்துடன் இந்த மனுவில் மூன்று இடைக்கால நிவாரணங்களையும் நாம் கோரியிருந்தோம். காண்டீபன் அவர்களை முதல்வர் பதவியிலும் அல்லது உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குகின்ற குறித்த வர்த்தமானி பிரசுரத்தை இடைநிறுத்தும் படியாக நாம் கேட்டிருந்தோம். அது இடை நிறுத்தப்பட்டிருக்கின்றது.