ஹெட்போன் அல்லது இயர்போன் மூலம் பாடல் கேட்டுக்கொண்டே பாதையை கடக்கும் பாதசாரிகளுக்கு, எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இவ்வாறான பாதசாரிகளுக்கு எச்சரிக்கை மட்டுமே வழங்கப்படுகின்றது. எனினும், விபத்து அபாயம் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் வீதி விபத்துகள் காரணமாக நாளொன்றுக்கு சராசரியாக 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2026 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை நாடளாவிய ரீதியில் 1,323 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 1,389 பேர் உயிரிழந்துள்ளனர்
2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், விபத்துகளின் எண்ணிக்கை 105-ஆலும் உயிரிழப்புகள் 107-ஆலும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் பயணிக்கும் பயணிகளே அதிகம் பாதிக்கப்படும் தரப்பினராக உள்ளதாகவும், கவனக்குறைவு, பொறுப்பற்ற நடத்தை, போக்குவரத்து விதிமீறல்கள், அதிவேகம், வாகனங்களின் போதிய பராமரிப்பின்மை மற்றும் வீதிகளின் மோசமான நிலை ஆகியவை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.