-மூதூர் நிருபர்-
திருகோணமலை -திரியாய் வளத்தாமலைப் பகுதில் பௌத்த பிக்குவின் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்று புதன் கிழமை இடம்பெற்றது.
குறித்த பகுதியில் மக்களுடைய உறுதிக் காணிகளை பௌத்த பிக்கு அடாவடித்தகமாக கையகப்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய அது தொடர்பான விசாரணை குச்சவெளி பிரதேச செயலகத்தில் செயலாளரின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வளத்தாமலைப்பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் மற்றும் அரிசிமலை விகாராதிபதியின் தனியார் உறுதிக் காணி என கூறப்படும் 18 ஏக்கர் காணிகளை அளந்து பௌத்த பிக்குவிற்கு கையளித்து ஏனையவற்றை மக்களுடைய விவசாய நடவடிக்கு வழங்குவதாக எட்டப்பட்ட முடிவுக்கு அமைய குறித்த அளவீடு நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ், மூஸ்லீம் மக்கள் உட்பட சிங்கள மக்கள் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பூஜா பூமி எனும் பெயரில் மக்களுடைய காணிகளை அரிசிமலை விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் ஆக்கிரமித்து வருவதாக தேரர் மீது குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன் அவர் இனங்களுக்கிடையே முறுகல் நிலையினை தோற்றுவித்து வருவதாகவும் எனவே அவரை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மூவின மக்களும் அரச அதிகாரிகளிடம் கோரிக்கையையும் முன்வைத்தனர்.
