-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் கடந்த ஆறு நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கடமையில் உள்ளார்கள். அந்தவகையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகியோர் கடமையில் உள்ளார்கள்.
வைத்திய நிபுணர் திருமதி. கவிதா தொடர்ச்சியாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட தினசரி வைத்தியசாலை விடுதிக்கு சென்று தனது நோயாளிகளை பார்வையிட்டு வருவதாகவும், ஆனால் வைத்திய நிபுணர் அஜந்தா சீராக வைத்தியசாலை விடுதிக்கு சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வைத்திய நிபுணர் அஜந்தா கடந்த புதன்கிழமை (18.09.2024) அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரம் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளார்.
அதற்கு பின்னர் நேற்று வரை (23.09.2024) வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளை பார்வையிடவில்லை என அவரிடம் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
குறித்த வைத்திய நிபுணரின் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் நோயாளிகள் நோயின் வீரியத்தால் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
குறித்த வைத்திய நிபுணர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த வைத்திய நிபுணர் தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர், அவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி, அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.