கனடா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், முக்கிய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான முன்னுரிமைத் தொழில் பிரிவுகளை அறிவித்துள்ளது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) குடிவரவு முறைமையின் ஊடாகப் பல்வேறு துறைகளில் அனுபவமுள்ள தொழில்சார் நிபுணர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதன்படி, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் துறைசார் நிபுணர்கள், திறன்மிகு தொழில்நுட்பப் பணியாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள், போக்குவரத்துத் துறைசார் நிபுணர்கள் ஆகியோர் முன்னுரிமைப் பிரிவுகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கனடாவில் பணி அனுபவம் கொண்ட மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உயர் மட்ட முகாமைத்துவப் பொறுப்புகளில் பணியாற்றும் நிபுணர்களுக்கும் இந்த அறிவிப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிரெஞ்சு மொழித் திறன் கொண்ட தொழிலாளர்களும் எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறைமையின் கீழ் முன்னுரிமை பெறும் பிரிவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கனடாவின் தற்போதைய தொழிலாளர் வளத்துக்குத் துணையாகத் திறமையான நபர்களை ஈர்ப்பதுடன், பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் என்ட்ரி என்பது கனடாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற விரும்பும் திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடிவரவு விண்ணப்பங்களை நிர்வகிக்கும் முறைமையாகும். இதன் கீழ், குறிப்பிட்ட தொழில்துறைத் தகுதிகள், பணி அனுபவம் அல்லது மொழித் திறன்களைக் கொண்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர வதிவிடத்துக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்புகள் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு, கனடாவில் குடியேறுவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கும் இலங்கைத் திறமையான தொழில்சார் நிபுணர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனினும், இதற்கான உரிய தகைமைகள் மற்றும் குடிவரவு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வது அவசியமாகும்.
எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறைமையின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரர்களைத் தெரிவுசெய்வது தொடர்பான மேலதிக விபரங்களை கனடாவின் உத்தியோகபூர்வ குடிவரவுத் திணைக்கள இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.











