மலையகத்தில் பல இடங்களில் ஒப்பாரி வைத்து போராட்டம் : போக்குவரத்து ஸ்தம்பிதம்

-நுவரெலியா நிருபர்-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

சாலை மறியல் போராட்டம், ஒப்பாரி போராட்டம், பறை அடித்து முறையிடும் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர்.

தமது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுத்தனர். சில தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

மேலும் சில இடங்களில் 12 மணிக்கு பிறகு போராட்டங்கள் இடம்பெற்றன.

பத்தனை சந்தியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தப்படித்து, ஒப்பாரி வைத்து, அரசு வீடு செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, ஹைபொரஸ்ட், இராகலை, உடபுஸ்ஸலாவ, நானுஓயா, டயகம, லிந்துலை நாகசேனை, அட்டன், கொட்டகலை, நோர்வூட், டிக்கோயா, நோட்டன்பிரிட்ஜ் ஒஸ்போன், மஸ்கெலியா, சாமிமலை அப்கட், பொகவந்தலாவை, கினிகத்தேனை, வட்டவளை, நல்லதண்ணி, என மேலும் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்றன.