-மட்டக்களப்பு நிருபர்-
ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச செயலகப் பகுதிக்கான விவசாயப் பெரும்போக ஆரம்பக் கூட்டம் இன்று புதன்கிழமை பிற்பகல் செங்கலடி பிரதேச மாநாடு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் , செங்கலடிப் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட மத்தி நீர்ப்பாசன பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய ஆணையாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், செங்கலடி உறுகாமம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் , வனவிலங்கு திணைக்கள உத்தியோகத்தர்கள், வன பரிபாலன சபை திணைக்கள உத்தியோகத்தர்கள், நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், காப்புறுதி நிறுவன உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெரும்போக பயிர்ச்செய்கைக்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் ,விதைப்பு, குளங்கள் நீர்ப்பாசன வேலைகள் , உரம் வழங்கல் , போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்தோடு இன்றைய கூட்டத்தில் குறிப்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மரக்கடத்தலுக்கு துணை போவதாகவும் , அப்பாவி மக்கள் விறகு வெட்டினால் நீதிமன்றம் செல்வதாகவும் விவசாயிகளினால் குற்றம் குற்றம் சாட்டப்பட்டது.