-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்ந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்லல் மற்றும் சுகாதாரத் துறையின் செயற்றிட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்தியர்கள்,வைத்தியத்துறைசார் வைத்தியர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுகாதாரத் துறையால் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் எவ்வாறு எடுத்துச் செல்வது? சுகாதாரத் துறையுடன் ஊடகங்கள் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.