கிழக்கில் மனிதாபிமான அடிப்படையில் எவ்வித இன மத பேதங்களும் கட்டணங்களும் இன்றி இருதய நோய் தொடர்பான சிகிச்சைகளை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகின்ற மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலையின் உயர்தர சேவைகளை பாராட்டும் வகையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்தியாவை சேர்ந்த சத்குரு ஶ்ரீ மதுசன் சாய் வழிகாட்டலில் செயலாற்றும் குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் மருத்துவ பேராசிரியர் வைத்தியர் சுந்தரேசன், மற்றும் வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளரும் இந்தியாவை சேர்ந்த வைத்தியருமான ரமேஷ் ராவ் தலைமையிலான குழுவினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர்கள் ஊழியர்களுடன் இணைந்து எமது பிரதேச மக்களுக்கு பேதங்கள் எதுவும் இன்றி அனைவரும் மனிதர்கள் எனும் அடிப்படையில் ஆற்றி வருகின்ற மகத்தான பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் சமூகத்தின் சார்பிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி எனும் அடிப்படையிலும் தனது நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஶ்ரீ சத்ய சாய் சஞ்ஜீவனி வைத்தியசாலையின் நாளாந்த மனிதாபிமான மருத்துவ சேவைகள் மற்றும் அதி நவீன வசதிகள் கொண்டதாக அமையப்பெற்றுள்ள இருதய நோய் சத்திர சிகிச்சை கூடம் என்பவற்றையும் பார்வை இட்டார்.
இதன்போது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர். சுந்தரேசன் இ பணிப்பாளர் வைத்தியர். ரமேஷ் ராவ், வைத்தியசாலையின் நிருவாக அதிகாரி பிரதீபன், கதிரியல் பிரிவு உத்தியோகத்தர் இக்ராம், உட்பட வைத்தியசாலையின் தாதியர்கள், ஊழியர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.
450 மில்லியன் பெறுமதியான நவீன இயந்திரத்துடன் 1500 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முற்றிலும் இலவசமாக இருதய நோயாளர்களின் நலன்கருதி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதுடன் இதுவரை 700 இற்கும் அதிகமான இருதய நோயாளர்களுக்கு அஞ்சியோ சோதனைகள் இ மற்றும் அவர்களது இருதய செயற்பாட்டிற்கு அவசியமான ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் பெரியவர்களுக்கான இருதய சத்திர சிகிச்சைகள் எவ்வித கட்டணங்களும் இன்றி முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்பட உள்ளதுடன், ஏற்கனவே 9 குழந்தைகளுக்கு இருதய அறுவை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என வைத்திய அத்தியட்சகர் பேராசிரியர் கே. சுந்தரேசன் இங்கு விபரித்தார்.
