மட்டக்களப்பு சித்தாண்டியில் இலஞ்சம் பெற்ற வந்தாறுமூலை கமநலஅபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் இன்று புதன்கிழமை செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் பெற்று தருவதாகவும் அத்துடன் மழை வெள்ளத்தால் வேளாண்மை சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்று தருவதாகவும் அதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை விவசாயிடம் இலஞ்சமாக கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த விவசாயி கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கிய நிலையில் அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவ தினமான இன்று பகல் செங்கலடி பகுதியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அருகாமையில் குறித்த சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் கொழும்புக்கு அழைத்துசெல்வதற்கான நடவடிக்கையை இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.