-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் கிழக்கு மாகாணத்திற்கான பயிற்சி பாசறை காணி நிருவாகத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் நவருபரஞ்சினி தலைமையில் இடம் பெற்றது.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி ஏ.எம். அமீன் ஏற்பாட்டில் வட கிழக்கு மாகாண சிரேஸ்ட இணைப்பு அதிகாரி பி. பிரதீபன் பங்கு பற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வுதிய திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நுட்பங்களையும் உபாய நெறிமுறைகளையும் பற்றி உத்தியோகத்தர்களுக்கு தெளிவு வழங்கப்பட்டது.
அரசாங்க ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை வழங்குவதே இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் பணியாகும்.
அரசாங்கத்தினால் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் தேவையான ஆலோசனை மற்றும் வழி காட்டுதல்கள் இதன்போது துறைசார் நிபுணர்களினால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி எஸ்.ரீ. சுதாகரன், உட்பட கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.