கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் மசாஜ் செய்வதாக கூறி வைத்தியரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 44 மற்றும் 54 வயதுடைய இருவரும் இரத்மலானை பகுதியை சேர்ந்த 19, 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு சந்தேக நபர்களுமே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
தென் மாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர் ஒருவருடன் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் மசாஜ் சேவையை பெற்றுக்கொள்ள பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிற்கு வருமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து குறித்த வைத்தியர் தொடர்மாடி குடியிருப்பின் அறை ஒன்றிற்கு கடந்த 8 ஆம் திகதி சென்ற நிலையில் அறையில் மறைந்திருந்த சந்தேக நபர்கள் சிலர் வைத்தியரை தாக்கி நிர்வாணமாக்கி அதனை காணொளியாக பதிவுசெய்ததுடன் கத்தியை காட்டி மிரட்டி வைத்தியரின் வங்கி கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை மற்றுமொரு வங்கி கணக்கிற்கு வைப்பு செய்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபர்கள் வைத்தியரின் பணப்பையில் இருந்த 15,000 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து இந்த வைத்தியர் இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியுடன் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் ஏனைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.