நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளை பறித்து, அடக்குமுறைகளை மேற்கொள்ளும் வகையிலேயே இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இடம்பெற வேண்டிய இந்த ஆண்டில் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை பொதுமக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தின் ஊடாக மக்களின் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் மீறப்படுவதாகவும் நியாயமான ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் இவ்வாறான ஒழுங்குமுறைப்படுத்தலை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், இதற்கு குறிப்பிட்ட கால அவகாசமே வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைவரையும் பெயரளவில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசாங்கம் தான் விரும்பியதை நிறைவேற்றியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.