-மன்னார் நிருபர்-
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது பொலிஸாரின் கட்டளையை மீறி குறித்த டிப்பர் பயணித்ததுடன் பொலிஸார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த டிப்பர் வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,கைது செய்யப்பட்ட நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்களும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரச மற்றும் தனியார் காணிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற போதும் அடம்பன் பொலிஸார் மௌனம் காத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Beta feature
Beta feature
