-வவுனியா நிருபர்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட அழைப்பு விடுத்துள்ளதுடன், வடக்கு – கிழக்குக்கு வெளியேயும் தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சி போட்டியிட பரிசீலனை என அக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது, இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம்.
ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது, அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது.
அரியநேந்திரன் அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம்.
அதற்கு அவருடைய விளக்க கடிதததில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை, அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது, ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டுதீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.
முக்கிய விடயமாக ஆராயப்பட்டது பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும், பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங் கொடுங்க விரும்பினால் வரமுடியும்.
தமிழ் தேசியக் கூட்டப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம்.
அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம், அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும்.
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம், அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு வரலாம் என தீர்மானித்துள்ளோம்.
அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு – கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம், அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம், ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது.
அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம், ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம்.
புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம், அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது, மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது, அது நல்ல விடயம், இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது, அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள், தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை, நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி, இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும்.
அதன் சின்னத்திலுமே தான், அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம் எனத் தெரிவித்தார்.