-நுவரெலியா நிருபர்-
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரூக்சைட் சந்தி – ஹைபொரஸ்ட் பிரதான வீதியின் சில்வர்கண்டி தோட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் ஒருவருக்குக் காலில் முறிவு ஏற்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார், என இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹைபொரஸ்ட் மாகுடுகலை தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இராகலையிலிருந்து புரூக்சைட் சந்தி ஊடாக மாகுடுகலை தோட்டத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.
இந்தநிலையில், இவர்கள் சில்வர்கண்டி தோட்டத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில், ஹைபொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலையை நோக்கிப் பயணித்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதுண்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பார ஊர்தியில் மோதுண்ட நிலையில் வீசி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த இளைஞர்களை சில்வர்கண்டி தோட்ட மக்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற இளைஞர் காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
இந்தச் சம்பவத்தில் மாகுடுகலையை சேர்ந்த ஞானபீட சமன்குமார (26 வயது) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார், என விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், பார ஊர்தி சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், பார ஊர்தியையும் கைப்பற்றியுள்ளனர்.