பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 362 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கம்பஹா, வத்தளை, மாபோல, அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எங்கு பார்த்தாலும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரத்துறை, மீன்பிடித் தொழில் என்பன வீழ்ச்சியடைந்துள்ளதால், இவற்றுக்கான தீர்வுகளையும், பதில்களையும், வேலைத்திட்டங்களையுமே அனைவரும் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
நாம் எப்போதும் நீதி நியாயம் மற்றும் மனிதநேயம் குறித்து சிந்திக்க வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் விடயத்தில் பிரித்து ஒரு தொகுதி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். மனிதாபிமானமற்ற முறையில் இந்த மதிய உணவு தற்போது வழங்கப்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இனவாதத்தைத் தூண்டாமல் பாடசாலைக் கல்வி முறையைப் பாதுகாக்க, ஸ்மார்ட் கல்வியை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
