-பதுளை நிருபர்-
மஹியங்கனை – அதாவுல்பாத பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் குழுவினால் மற்றுமொரு மாணவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான மாணவன் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
குருவிதென்ன பகுதியில் வசிக்கும் அதே பகுதியில் உள்ள பாடசாலையில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலையில் கல்வி கற்கும் 12ஆம் ஆண்டு மாணவர்களினால் தனது மகன் தாக்கப்பட்டதாகவும், அவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாணவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரிதிமாலியயெத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.சி.வீரகோன் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.