கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை, பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செப்டெம்பர் 26ஆம் திகதி இரவு, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதற்காக, ஒரு கிலோ கோழிக்கறி வாங்கி வருமாறு குறித்த பொலிஸ் அதிகாரி நபர் ஒருவரிடம் கேட்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காணொளி தொடர்பில் கம்பஹா பொலிஸ் பிரிவு 04-க்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையின் அடிப்படையில், குறித்த பொலிஸ் சார்ஜன்டை சேவையிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை கம்பஹா பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (படம் AI)










