நுவரெலியா, ஹாவாஎலிய, ஸ்ரீநகர் அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தேர் திருவிழா
நுவரெலியாவில் வரலாற்று சிறப்பு மிக்க ஹாவாஎலிய, ஸ்ரீநகர் அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தேரில் வெளிவீதி உலா வந்து இன்று தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.
கடந்த ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக பூஜைகள் இடம்பெற்று வருகின்றது.
இதில் சனிக்கிழமை பால்குட பவனி நடைபெற்று, சங்காபிஷேகத்தை தொடர்ந்து பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மாலை வேட்டைத்திருவிழாவும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை தீ மிதிப்பை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ கருமாரியம்மன், சோமாஸ்கந்த மூர்த்தி, சண்டேஸ்வரர் ஆகிய ஐந்து தெய்வங்களின் சிலைகள் தேரில் ஏற்றப்பட்டு வெளி வீதியூடாக நுவரெலியா பிரதான நகரில் சுற்றுவட்ட பகுதியூடாக பக்தர்களால் பக்தி பூர்வமாக ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
குறித்த தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்
தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை பச்சை சாத்துதல் மாலை மாவிளக்கு பூஜையுடன் பூங்காவன பூஜை நடைபெறும். நாளைமறுதினம் புதன்கிழமை தீர்த்த உற்சவமும் கரகம் வீதி உலா என்பன நடைபெற்று கொடி இறக்கத்துடன் விழா இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது