விபத்துக்குள்ளான வாகனங்களை பழுதுபார்ப்பதற்காக ‘ஈசிகேஸ்’ மூலம் பணத்தை மாற்றுமாறு மக்களை வற்புறுத்தும் புதிய வகை நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு பகுதிகளில் உள்ள டிப்போக்களை குறிவைத்தே குறித்த நிதி மோசடி மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி போலவோ, அல்லது முகாமையாளர் போலவோ அல்லது விபத்தை சந்தித்தவரின் உறவினர் போலவோ நடித்து விபத்தில் சிக்கிய வாகனத்தை சரிசெய்ய ஈசிகேஸ் ‘eZ Cash’ மூலம் 10,000 ரூபா பணம் அனுப்பக் கோரியுள்ளனர்.
சில சந்தர்ப்பங்களில், விபத்துக்குள்ளான வாகனத்தை பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் போலவோ, பொலிஸ் அதிகாரி அல்லது பிற சிறப்பு அதிகாரிகளைப் போலவோ நடித்து மோசடி செய்பவர்கள் பணத்தைக் கோருவதுடன், கேட்கப்பட்டபடி பணம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவை இறந்த ஒருவருடையது அல்லது வெளிநாட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அல்லது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோன்ற அழைப்புகள் வந்தால், தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் சரிபார்த்து, இதுபோன்ற நிதி மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.