2026 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வாரம் நவம்பர் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரம் இவ்வருடத்தின் மூன்றாம் தவணையின் இறுதி வாரம் என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட சில விசேட சூழ்நிலைகள் (குறிப்பாக ‘டித்வா’ சூழ்நிலை காரணமாகப் பரீட்சைகளை ஒத்திவைக்க நேரிட்டமை) காரணமாக, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 197 பாடசாலை நாட்களின் எண்ணிக்கை 186 நாட்களாகக் குறைவடைந்துள்ளது.
இக்காரணத்தினால் பாடசாலை நாட்களை மேலும் குறைப்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே சில பாடசாலைகளில் இறுதிப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பாடசாலைகளில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், எவ்வித இடையூறுகளோ அல்லது மாற்றங்களோ இன்றி திட்டமிட்டபடி இவ்வாரத்திற்குள் அனைத்துப் பாடசாலை நடவடிக்கைகளையும் நிறைவு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாளைய தினத்தை ஒரு சாதாரண பாடசாலை நாளாகக் கருதி செயற்படுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பெற்றோர்களிடமும் பாடசாலை மாணவர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்றைய தினம் நடைபெறவுள்ள பரீட்சைகள் உள்ளிட்ட அனைத்துப் பாடசாலை நடவடிக்கைகளும் எவ்வித மாற்றமும் இன்றி முன்னெடுக்கப்படவுள்ளதால், வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கல்வி அமைச்சினால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, 2026 ஆம் ஆண்டிற்குரிய மூன்றாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகளை டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவு செய்ய நாம் எதிர்பார்க்கிறோம். அதற்கமைய, எதிர்வரும் வாரம் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்துடன் நாம் 2026 கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் இறுதி வாரத்திற்குள் பிரவேசிக்கின்றோம்.
இவ்வருடத்தில் நடத்தப்பட வேண்டிய பாடசாலை நாட்களின் எண்ணிக்கையாக 197 நாட்களை நாம் திட்டமிட்டிருந்தோம். ஆனால், 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சில விசேட சூழ்நிலைகள், குறிப்பாக ‘டிட்வா’ சூழ்நிலை காரணமாகப் பரீட்சைகளை ஒத்திவைக்க நேரிட்டமையால், தற்போது 186 பாடசாலை நாட்களை மாத்திரமே நடத்தக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.
இக்காரணத்தினால், பாடசாலை நாட்களை எந்த வகையிலும் குறைப்பதற்குத் தற்போது வாய்ப்பு இல்லை. எனவே, இக்கல்வியாண்டிற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் டிசம்பர் 4 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சு அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்துள்ளது. அதன்படி, இவ்வாரத்திற்குள் அனைத்து அதிகாரிகளினாலும் இந்நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது.
நாம் அறிவுறுத்தியுள்ளவாறே பல பாடசாலைகளில் இறுதிப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. சில பாடசாலைகள் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளன. சில பாடசாலைகள் பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளை ஏற்பாடு செய்துள்ளன. எவ்வித இடையூறுகளோ அல்லது மாற்றங்களோ இன்றி திட்டமிட்டபடி இவ்வாரத்திற்குள் இச்செயற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதே எமது அறிவுறுத்தலாகும்.
எனவே, இந்த அறிவுறுத்தல் மிகவும் தெளிவானது. இதற்கமைய, நாளைய தினம் 30 ஆம் திகதி எமது பாடசாலை தவணை அட்டவணைக்கு அமைய சாதாரண பாடசாலை நாளாக நடத்தப்படும். அன்றைய தினத்திற்காகப் பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரீட்சைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எவ்வித மாற்றமும் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.
கல்வி அமைச்சின் செயலாளர் என்ற ரீதியில், நாளைய தினத்தை ஒரு சாதாரண பாடசாலை நாளாகக் கருதி செயற்படுமாறு பெற்றோர்களிடமும் பாடசாலை மாணவர்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதற்கமைய, நாம் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலைகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.










