மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய மாணவர்களுக்கும் மகரகம இளைஞர் பயிற்சி நிலைய மாணவர்களுக்கும் இடையிலான இளைஞர் பரிமாற்று நட்புறவு வேலைத்திட்டமானது இன்று சனிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 3ஆம் திகதி வியாழக்கிழமை வரை புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர்களிடைய நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தி கிழக்கு மேற்கு சகோதரத்துவ உறவுப் பாலத்தினை கட்டியெழுப்பும் வகையில் குறித்த ஆறு நாட்களும் புதுக்குடியிருப்பு கிராமம் மற்றும் இளைஞர் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் வீடுகளில் தங்கி நிற்கும் சகோதர இன இளைஞர் யுவதிகள் எமது பிரதேசத்தின் கலை இலக்கியம் பண்பாடு வாழ்கை முறை போன்றவற்றினை அறிந்து கொள்வதற்கும் சகோதரத்துவத்தினை மேம்படுத்துவதற்குமான நிகழ்வாக இவ்வேலைத்திட்டம் அமையப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி கிஸ்கந்த முதலி தலைமையில் ஆரம்பமான இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் நிசாந்தி அருள்மொழி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள் சசிக்குமார் தயாசீலன் மாவட்ட நிஸ்கோ முகாமையாளர் அருளானந்தம் இளைஞர் சேவை அதிகாரிகள் புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கனேஸ்வரர் கண்ணகி அம்பாள் ஆலய பரிபாலன சபையினர் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இளைஞர் கழக அங்கத்தவர்கள் பயிற்சி நிலைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
















