கிழக்கு மாகாண மக்களின் நீண்டகால மருத்துவத் தேவைகளில் ஒன்றாகக் காணப்பட்ட வாய், தாடை மற்றும் முகம் தொடர்பான விசேட சத்திர சிகிச்சை சேவைகள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் வாய், தாடை மற்றும் முகம் தொடர்பான சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் ஷஸ்லி ஹமீட், சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் தனது விசேட மருத்துவ சேவைகளை முன்னெடுத்து வருகின்றார்.
அவரது வழிகாட்டுதலின் கீழ், குறித்த வைத்தியசாலையில் வாய், தாடை மற்றும் முகச் சத்திர சிகிச்சைப் பிரிவு வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பிரிவின் ஊடாக விபத்துக்களினால் முகத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களைச் சத்திர சிகிச்சை மூலம் சீரமைத்தல், உதட்டுப் பிளவு மற்றும் அண்ணப் பிளவு போன்ற பிறவிக் குறைபாடுகளுக்கான சிகிச்சைகள், ஒழுங்கற்ற தாடை அமைப்புகளைச் சீரமைத்தல் போன்ற விசேட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், வாய் மற்றும் முகப் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கான சிகிச்சைகள், மூக்கு, காது மற்றும் கண் பகுதிகளின் உருவம் மற்றும் அளவு தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், உதடு, கன்னம், நாக்கு, உமிழ்நீர்ச் சுரப்பிகள் மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் இப்பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், முக அழகியல் குறைபாடுகளைச் சீரமைக்கும் முக அழகியல் சத்திர சிகிச்சைகளும் இச்சேவையின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. கிழக்குக் கரையோரப் பிரதேசத்தில் இத்துறைசார் விசேட மருத்துவ சேவைகளுக்கான பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வந்த நிலையில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளமை பிரதேச மக்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதன் மூலம் அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு வாய், தாடை மற்றும் முகம் தொடர்பான விசேட சத்திர சிகிச்சைகளைத் தமது பிரதேசத்திலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், இத்தகைய சிகிச்சைகளுக்காகத் தூர இடங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.










