தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார்-பள்ளிமுனை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்-

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் பள்ளிமுனை கடற்கரைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்

தொழிலாளர்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும், இலங்கையில் தீர்க்க முடியாமல் காணப்படும் இனப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பள்ளிமுனை மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் பள்ளிமுனை பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ, மன்னார் நகர சபை உப தலைவர் ஜான்ஸன் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆட்சியாளர்களே அப்பாவி பொது மக்களின் வாழ்க்கையை நசுக்காதீர்கள், குழந்தைகளுக்கான பால்மா எங்கே?, தொழிலாளர்களின் பட்டினி நிலைக்கு பதில் சொல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, விலை உயர்வு உனக்கு என்ன விளையாட்டு, கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை வழங்க ஆவன  செய், திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நிறுத்து, மன்னார் வளைகுடாவில் கடல் வளங்களை அழிக்காதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? போன்ற பல்வேறு உணர்ச்சி ரீதியாக எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.