-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வெருகல் – வட்டவன் பகுதியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் போது வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் திருகோணமலையில் போட்டியிடும் வேட்பாளர்களான கிறிஸ்ணப்பிள்ளை சிறி பிரசாத் ,கணேசப்பிள்ளை குகன்,நாகப்பன் இதயசீலன்,நவரட்ணராசா ஹரிகரகுமார்,கதிர்காமத் தம்பி வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் அணி செயலாளரும் ,கட்சியின் தலைமைப் வேட்பாளருமான கிறிஸ்ணப் பிள்ளை சிறி பிரசாத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –
தேசமாய் திரண்டு தலைநகரை மீட்போம் எனும் துணைப் பொருளில் எமது பிரச்சாரத்தை நாம் ஆரம்பித்து உள்ளோம். திருகோணமலையில் தமிழர்கள் சிறுபான்மையாக இருந்த போதிலும் நாங்கள் ஒரு தேசிய இனம்.நாம் ஒன்று திரண்டால் மாத்திரமே எமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும்.பல பக்கங்களினாலும் எமது இறப்பு அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.இதனை மீட்க கூடிய ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி காணப்படுகிறது.
எமது மக்களின் குரலாக நாம் ஒலித்ததன் பயனாக வடகிழக்கில் நாம் 10 ஆசனங்களை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.பல ஊழல்வாதிகள் ஒற்றுமை என்ற கோசத்துடன் திருகோணமலையில் களமிறங்கியுள்ளனர்.இவர்கள் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் எதிலும் பங்கு கொள்ளாதவர்கள் மாறாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மாத்திரமில்லாமல் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தவர்கள்.
கடந்த 15 வருடங்களாக தமிழ் மக்களை இவர்கள் ஏமாற்றியதன் பயனாகத்தான் பெரும்பான்மை சிங்களக் கட்சிகளோடு தமிழர்கள் செல்லும் நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.இதற்கு காரணமானவர்கள் தமிழ் மக்களினால் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு திருவண்ணாமலை மக்கள் ஆசனம் தருவதற்கு தயாராகிவிட்டனர்.
நாங்கள் எந்த சலுகைகளுக்கும் சோரம் போகவில்லை பார் லைசன்ஸ் பெறவில்லை.எமது தலைவர்கள் நேர்மையாக நடந்துள்ளனர்.எமது கட்சியின் தலைவர்கள் நேர்மையானவர்கள் என்று நாம் செல்கின்ற இடங்களில் மக்கள் சொல்கின்றார்கள்.
திருகோணமலை மாவட்டத்தில் போதை பெரிய பிரச்சினையாக இருக்கிறது.இப்படியான சந்தர்ப்பத்தில் மூதூரில் இருக்கின்ற பார்கள் திருகோணமலையில் ஒற்றுமை என்ற கூட்டில் இருப்பவர்களால் தான் வந்தது.அவர்கள் இன்று மக்களிடம் போக முடியாத நிலை காணப்படுகிறது.ஒற்றுமையேனும் கோஷத்துடன் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கு முன் வந்துள்ளனர். இதனை மக்கள் சரியாக தெரிந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.