தமிழ் – சிங்கள சித்திரைப் புதுவருடத்தை சிறப்பிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபையின் அமைப்புக்கள், கொத்தணிகள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களிற்கிடையிலான கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகள் இன்று புதன்கிழமை திருகோணமலை – உவர்மலை மைதானத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குமாரசிங்கம் குணநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நாகராசா மணிவண்ணன் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜீ.திசாநாயக்க, கிழக்கு மாகாண பேரவைச் செயலக செயலாளர் வி.வில்வரட்ணம் , ஆளுநரின் செயலாளர் பீ.வாகீசன், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) ந.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் குமாரசிங்கம் குணநாதன் தலைமையுரையாற்றுகையில் கிழக்கு மாகாண சபையின் அமைப்புக்கள் கொத்தணிகள் மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பல்துறை சார் திறனை மேம்படுத்தும் நோக்குடன் தேசிய ஒற்றுமை மற்றும் பொது உணர்வுகள் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களது நட்பும் புரிந்து கொள்ளும் தன்மையை அதிகரிப்பதையும் நோக்காகக் கொண்டு தேசிய கொண்டாட்டமாக சித்திரைப் புத்தாண்டு விழாவை கொண்டாடும் குறிக்கோளுடனும் வருடந்தோறும் ஒழுங்கு செய்யப்படுகின்ற சிங்கள தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாடும் குறிக்கோளுடனும் இன்று சித்திரை புத்தாண்டு கலை, கலாசார விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வுகளாக அழகு ராணிப்போட்டி, கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், உட்பட மற்றும் பல்வேறு போட்டி நிகழ்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







